சிவகங்கை: இறந்தவரின் உடலை தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட உள்ள ஊராட்சிகளில் பெரிய ஊராட்சி அ.காளாப்பூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள். அ.காளாப்பூர் கிராமத்தின் அனைத்து மக்களுக்கும் பாலாற்று பகுதியின் மறுகரையில் பொது மயானம் உள்ளது. பல ஆண்டுகளாக இறந்தவர்களின் சடலங்களை பாலாற்றை கடந்து தான் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர். சமீபத்தில் வடகிழக்கு பருவமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது இடுப்பளவு வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் காளாப்பூரில் இறந்த இருவரின் உடல்கள் பொது மயானத்திற்கு கொண்டு செல்ல பாலாற்றில் ஆர்ப்பரித்து வரும் இடுப்பளவு தண்ணீரில் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். பருவமழை காலங்களில் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாலாற்றை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதில் ஆண்டுதோறும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும், இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

தொடர்புடைய செய்தி