சிவகங்கை: உயிருக்கு போராடிய மான்; முதலுதவி செய்த மக்கள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் எஸ். வி. மங்கலம், பிரான்மலை, மேலவண்ணாயிருப்பு, கரிசல்பட்டி, கணபதிபட்டி, வாராப்பூர், புழுதிபட்டி வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் துவங்கியதால் தண்ணீர் தேடி இரவு பகல் நேரங்களில் சாலைகளை கடக்கும் போது வாகனங்களில் மோதி மான்கள் உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தண்ணீர் தேடி புழுதிபட்டி புளியமலையில் இருந்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்த ஆண் புள்ளிமானை அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி எறிந்ததில் சாலையின் கீழ்புறமாக வந்து விழுந்துள்ளது. 

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த சமூக ஆர்வலர்கள் மான் இடுப்பு பகுதியில் அடிபட்டு உயிருடன் இருப்பதை கண்டு முதலுதவி செய்து எஸ். புதூர் வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். கோடை காலம் துவங்கியுள்ளதால் வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீரை நிரப்பி சாலைகளை கடக்க விடாமல் மான்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி