சிவகங்கை: ஆர்ப்பரித்து அருவி போல் கொட்டும் மழைநீர்- வீடியோ

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏரியூர் ஊராட்சி கழுங்குபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது ஏரிக்கண்மாய். சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டு கடல் போல் காட்சியளிக்கும் இக்கண்மாய்க்கு ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை, ஏறக்காமலை, கறந்தமலை போன்ற பல்வேறு மலைகளில் பெய்யும் மழைநீர் ஒன்றாக இணைந்து மணிமுத்தாற்றில் கலந்து வரத்து கால்வாய் மூலம் இக்கண்மாய்க்கு வருவது வழக்கமாகும். 

இந்நிலையில் கடந்த மாதம் பருவமழை தொடங்கி கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் கடந்த 50 நாட்களுக்கு மேலாக வெளியேறிய வண்ணம் இருந்து வருகிறது. இதில் குளித்து மகிழ சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு தினங்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக சிவகங்கை மதுரை புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் அதிகப்படியான வெள்ளநீர் வரும் காரணத்தினால் கலிங்குபாதை வழியாக கண்மாய் தரைமட்டத்திலிருந்து சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டும் காரணத்தினால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கிராமமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையில் இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி