சிவகங்கை: கபடி போட்டியில் விளையாடிய வீரர் பலி (VIDEO)

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கபடி வீரர்கள் வருகை புரிந்து களத்தில் விளையாடினர். கொரட்டி அணிக்காக விளையாடிய புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு பிச்சாந்துபட்டியை சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் சிவகணேஷ் என்ற 54 வயது வீரர் கபடி விளையாடிக் கொண்டிருக்கும் போழுது கையில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து அவர் அருகில் இருந்த கண்டரமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றதாக தெரிகிறது. 

அதனை அடுத்து அங்கிருந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவருடன் வந்த வீரர்கள் சேர்த்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் சிவகணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியது அடுத்து அதிர்ச்சி அடைந்த கபடி வீரர்கள் புரியாது திகைத்து நின்றனர். இதனை அடுத்து திருக்கோஷ்டியூர் போலீசார் சிலம்பம் மாஸ்டரும், கபடி வீரருமான சிவகணேஷ் இறப்பு குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சிவகணேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரைக் கண்டு அவரது உறவினர்கள் மற்றும் மாணவர்கள் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

தொடர்புடைய செய்தி