சிவகங்கை: லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்த அன்பு மலைக்கண்ணன் (எ) சாதுமங்கலசாமியின் பேத்தி நவபாரதிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த 2010 ஆம் ஆண்டு காளையார்கோவில் காவல் நிலையத்தில் தனது பேத்திக்கு சீதனமாக கொடுத்த இருசக்கர வாகனத்தை பெற்றுத் தருமாறு காவல் ஆய்வாளர் செங்குட்டுவனிடம் அன்பு மலைக்கண்ணன் (எ) சாதுமங்கலசாமி புகார் அளித்தார்.

இருசக்கர வாகனத்தை விடுவிக்க ரூ. 2000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சாதுமங்கலசாமி ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி ரூ.2000 லஞ்சம் கொடுத்தபோது காவல் ஆய்வாளரை ஊழல் தடுப்பு பிரிவினர் கையும் களவுமாக பிடித்து, வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு ஆட்சியரகப்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இதனை விசாரணை செய்த நீதிபதி செந்தில் முரளி இன்று அக்.7 தீர்ப்பு வழங்கினார். அதில் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் செங்குட்டுவனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். லஞ்ச வழக்கில் காவல் ஆய்வாளர் சிறை தண்டனை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி