ராமநாதபுரம்: பொதுமக்களை அச்சுறுத்திய மாட்டை பிடித்த நகராட்சி ஊழியர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். அதுபோல கல்வி, தொழில் நிமித்தமாக தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரமக்குடி நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களாக பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் சுற்றி திரிந்த ஒரு காளை மாடு பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி வந்தது. இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரை தாக்கியதில் காயம் அடைந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தொடர்ந்து பரமக்குடியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததுடன் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை முட்டி தூக்கியது. இதனையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மாட்டை பிடிக்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களை அச்சுறுத்தி தாக்கிவந்த மாட்டை பரமக்குடி நகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் பிடிக்க முற்பட்டனர். ஆனால் மாடு தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாட்டை கயிறு மூலம் கட்டி பத்திரமாக பிடித்தனர். தெரு நாய் கடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாடு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி