கமுதி: இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறி வரும் அரசு மருத்துவமனை

கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அவசர சிகிச்சைக்கு வருவோர், அவசர ஊர்தி ஓட்டுநர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனையில் கமுதி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 

மேலும், விபத்து, பிரசவம் உள்ளிட்டவற்றுக்காகவும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், இவர்களின் உறவினர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால், அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்து வரும் அவசர ஊர்தி ஓட்டுநர்களும், நோயாளிகளும் அவதிக்குள்ளாகின்றனர். 

இந்த மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இருந்தும், நுழைவாயிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், மருத்துவமனை வளாகம் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடமாக மாறி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள், மருத்துவமனைப் பணியாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனி இடம் ஒதுக்கிட செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி