இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் பகல், இரவு நேரங்களில் குறைந்த அழுத்தம், உயர் அழுத்தம் என மாறி, மாறி மின்னழுத்தப் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகள், கடைகள், அலுவலகங்களில் மின்னூட்டம் செய்யப்பட்ட கைப்பேசிகள், பயன்பாட்டில் இருந்த கணினிகள், இன்வெர்ட்டர்கள், எலக்ட்ரிக் எடை இயந்திரங்கள், எல்.இ.டி. டிவிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் மோட்டார்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மின்உபயோக சாதனங்கள் பழுதடைந்தன.
கடந்த 2 நாள்களில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மின் சாதனங்கள் பழுதடைந்ததாக பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, முதுகுளத்தூர் பகுதியில் நிலவி வரும் மின்அழுத்தப் பிரச்சினையை சீரமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.