புதுகை: மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

திருச்சி மாவட்டம் ஊனையூர் அருகே கள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் சித்துரூபன் (வயது 5). பிரபாகரன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சிறுவன் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள தளிஞ்சியில் நடந்த கோவில் திருவிழாவைப் பார்க்க அவரது உறவினர் வீட்டிற்கு வந்தான். பின்னர் சித்துரூபன் தனது உறவினர் ஒருவருடன் திருநாடு-மணப்பாறை சாலையில் உள்ள கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சித்துரூபன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சித்துரூபன் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மேலும் சிறுவனுடன் வந்த அவரது உறவினருக்கு எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த திருச்சி மாவட்டம் புதுக்குடியைச் சேர்ந்த கணபதி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி