திருமயம் அரிமளம் அருகே 15 ஆண்டுகளுக்குப் பின்னர் குடிநீர் ஊரணி சுத்தம் செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள செங்கீரை கிராமத்தில் அப்பகுதி மக்கள் இன்றளவும் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் நல்ல பிள்ளை பெத்தான் ஊரணி என்ற வினோத பேருடன் இருந்து வருகிறது. இந்த ஊரணிக்கான நீரானது செங்கீரை தைலம்மர வனப்பகுதிக்குள் பெய்யும் மழை நீர் கால்வாய்மூலம் ஊரணியில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஊரணி தூர்வாரி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஊரணியை தூர்வார கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் செங்கீரை கிராம மக்களுடன் ஊராட்சி நிர்வாகமும் சேர்ந்து குடிநீர் ஊரணியை சுத்தம் செய்ய முன் வந்தது. இதன் அடிப்படையில் முதலில் ஊரணியில் இருந்த நீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டது.
அப்போது ஊரணிக்குள் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு சேரும் சகதியும் தேங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் பொக்லைன், டிராக்டர் உதவியுடன் பல நாட்கள் போராடி சேரை வாரி வெளியில் கொண்டு கொட்டினர். இதனைத் தொடர்ந்து ஊரணியின் மையப் பகுதியில் இருந்த கிணறும் தூர்வாரப்பட்டது. அதேசமயம் ஊரணிக்கு கூடுதலாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு சேதம் அடைந்த ஊரணி சுற்றுச் சுவர்கள் புனரமைக்கப்பட்டு தற்போது புது பொலிவுடன் காட்சியளிக்கிறது.