விராலிமலை: தனியாக இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்கசங்கிலி பறிப்பு

விராலிமலை தாலுகா குன்னத்துார் ஊராட்சி நசரேத் பகுதியை சேர்ந்தவர் அமலோற்பவமேரி (73). நேற்று முன்தினம் இவரது மகன் லாரன்ஸ், மருமகள் மற்றும் குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள சர்ச்சுக்கு சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த அமலோற்பவமேரி இரவு 8 மணியளவில் கழிப்பிடத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தார்.

 அப்போது, மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த நிலையில், மூதாட்டி உள்ளே நுழைந்ததும் மர்ம நபர் ஒருவர் கழுத்தை கையால் இறுக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார். அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டார். ஆனால், அருகில் வசித்தவர்களுக்கு சத்தம் கேட்கவில்லை. 

சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய மகனிடம் நடந்த சம்பவம் பற்றி மூதாட்டி தெரிவித்தார். இதுபற்றி லாரன்ஸ் மாத்தூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சட்டநாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி