பெரம்பலூர்: வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 41). இவருக்கு பெரம்பலூர்-துறையூர் ரோட்டில் கல்யாண் நகரிலும் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டின் மேல் தளத்தில் உள்ள 2 வீடுகளையும் வினோத்குமார் வாடகைக்கு விட்டுள்ளார். 

தரைத்தளத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விடாமல் பூட்டியே வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த வீட்டிற்கு வந்த மர்ம ஆசாமிகள் மேல் தளத்தில் உள்ள 2 வீடுகளின் கதவுகளின் வெளிப்பக்கத் தாழ்ப்பாளை போட்டுள்ளனர். பின்னர் தரைத்தளத்தில் உள்ள வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ரூ. 13 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். 

இதுதொடர்பாக வினோத்குமார் பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்புத் துலக்கப்பட்டது. 

இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்துச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி