பெரம்பலூர்: 18 பயனாளிகளுக்கு ரூ. 2.51லட்சத்தில் நலத்திட்ட உதவி

பெரம்பலூரில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு ரூ.2.51 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (டிசம்பர் 23) காலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில், கலெக்டர் அலுவலக வாரண்டாவில் அமர்வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே கலெக்டர் சென்று, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். 

பின்னர், வருவாய் துறையின் சார்பில் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு விபத்து மரண உதவித்தொகையாக ரூ.1,02,500க்கான காசோலையினையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.22,500 மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகைக்கான காசோலைகளையும், 4 பயனாளிகளுக்கு ரூ.34,000 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைக்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.11,445 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.890 மதிப்பீட்டில் ஊன்றுகோலையும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.2,51,170 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டக் கலெக்டர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி