இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய கலைமகள் மற்றும் ஜெயா என்ற இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு இடையே, பேருந்து புறப்படும் நேரம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜெயா பேருந்து முதலில் புறப்பட்டு சென்ற நிலையில், பின்னர் கலைமகள் பேருந்து அதனை முந்திச் சென்றுள்ளது. ஈச்சனாரி அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில், கலைமகள் பேருந்து நிறுத்தப்பட்ட போது, ஜெயா பேருந்து மீண்டும் அதனை முந்திச் சென்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயா பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், கலைமகள் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்க முயற்சித்துள்ளனர். இரு தரப்பினரையும் பயணிகள் சமாதானப்படுத்திய போதிலும், ஜெயா பேருந்தின் ஓட்டுநர் திடீரென தனது பேருந்தை பின்னோக்கி இயக்கி, கலைமகள் பேருந்து மீது மோதி அச்சுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, கலைமகள் பேருந்தின் ஓட்டுநர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.