கோவை: போதை ஆசாமி இறந்த வழக்கில் வாலிபர் கைது

கோவை ரயில் நிலையம் அருகில் ஸ்டேட் பேங்க் ரோட்டில் டீக்கடை உள்ளது. இங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் ரகளை செய்து கொண்டு இருந்தார். கால்களில் சாக்கை மாட்டிக் கொண்டு குதிப்பது, சத்தம் போடுவது என அவர் அங்கும் இங்கும் சுத்தி திரிந்தார். அப்போது அங்கு டீக்கடையில் பணியாற்றி வரும் அன்வர் உசேன் (22) என்பவர் அந்த வாலிபரிடம் இதுகுறித்து கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது குடிபோதையில் ரகளை செய்த வாலிபரை அன்வர் உசேன் பிடித்து தள்ளிய போது அவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். தலையில் ரத்தம் கொட்டிய நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து புளியகுளம் கிராம நிர்வாக அதிகாரி, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து அன்வர் உசேனை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி