உதகை: முதுமலையில் பசுமை புத்தாண்டு; பட்டாசுக்கு தடை

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை புத்தாண்டை கொண்டாடுமாறு வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். மசினகுடி வெளிவட்டம் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள், தனியார் விடுதிகள் அடங்கிய இப்பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது வெடிக்கப்படும் பட்டாசுகள், வனச்சூழல் மற்றும் வன உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

இதனை கருத்தில் கொண்டு, பட்டாசு இல்லாத பசுமை புத்தாண்டை கொண்டாட வனத்துறையினர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளனர். சிங்கார வனச்சரகர் தனபால் தலைமையிலான வனத்துறையினர், கிராமங்கள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு நேரில் சென்று துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

இப்பகுதி முழுவதும் வனம் மற்றும் வன உயிரினங்கள் நிறைந்த பகுதி. பட்டாசு சப்தம் வன உயிரினங்களை அச்சுறுத்தி, அவற்றின் இயல்பான வாழ்க்கை முறையை பாதிக்கும். எனவே, பட்டாசு இல்லாமல் பசுமை புத்தாண்டை கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி