உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து அடர்ந்த மலைப்பாதை வழியாக குன்னூர் மற்றும் ஊட்டி வரை உள்ள அழகிய மலை முகடுகளையும், இயற்கை காட்சிகளையும், வானுயர்ந்த மலைகளையும், வன விலங்குகளையும், ஆங்காங்கே அழகிய நீர்வீழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கும் வகையில் செல்லும் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் வார விடுமுறை நாளான இன்று தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிந்து சுற்றுலா தளங்களைக் கண்டு ரசித்து வரும் நிலையில் உலக புகழ்பெற்ற யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக இன்று காலை முதல் உதகை ரயில் நிலையத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து காத்திருந்து உதகையிலிருந்து குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்து புகைப்படங்களை எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.