உதகையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்

நீலகிரி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் உதகையில் நடைபெற்றன. 44 பள்ளிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். 

நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உதகை சிறப்பு மலைப்பகுதி திட்ட திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் கோத்தகிரி வட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 

இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட 44 பள்ளிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 

இந்த விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு வெற்றிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி