நீலகிரி: சாலையை சீரமைத்து தர கோரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி உட்பட்ட 28வது வார்டு பகுதியான முள்ளிக்கொரை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக உள்ளதுடன், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதோடு, நோயாளிகள் செல்ல 108 ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் முதியவர்கள், சிறுவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இச்சாலையில் கழிவுநீர்கள் வழிந்து ஓடுவதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு வருவதாகவும், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், நகரமன்ற உறுப்பினரிடமும் பலமுறை மனு அளித்தும் இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைத்து தரவேண்டும் எனவும், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி