பந்தலூர்: காட்டு யானை அட்டகாசம் - கண்காணிக்கும் வனத்துறை

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் புல்லட் என்று அழைக்கப்படும் காட்டு யானை அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இந்த யானையை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், புல்லட் யானை கடந்த சில நாட்களாக தேயிலை தோட்டங்கள், விவசாய நிலங்கள் என பல இடங்களில் திரிந்து பொருளாதார பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

இந்த யானையை பிடிக்க முதுமலையிலிருந்து கும்கி யானைகள் பொம்மன், சீனிவாசன் ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் எலியாஸ் கடை பகுதியில் தீ மூட்டி விடிய விடிய கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது. மேலும் டிரோன் கேமரா மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது. 

பொதுமக்கள் யாரும் யானையை நெருங்கி செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றனர். வனத்துறையின் இந்த நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், புல்லட் யானையை விரைவில் பிடித்து காட்டில் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி