ஊட்டி: தேயிலை ஏலம்.. ரூ.30 கோடிக்கு மேல் வருமானம்

தென் மாநிலங்களில் உள்ள மூன்று ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலத்தில் மொத்தம் 30.47 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. குன்னூர், கொச்சி ஆகிய இடங்களில் ஏலம் நடந்த நிலையில், கோவையில் ஏலம் நடைபெறவில்லை. குன்னூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் 13.42 லட்சம் கிலோ தேயிலை ஏலத்திற்கு வந்ததில், 12.31 லட்சம் கிலோ விற்பனையானது. இதன் மூலம் 14.73 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. 

கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் டீசர்வ் மையத்தில் ஏலம் விடப்பட்டதில், 1.11 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. குன்னூர் மற்றும் டீசர்வ் ஏல மையங்களில் மொத்தம் 15.84 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஏலத்தில் 9.08 லட்சம் கிலோ தேயிலை ஏலத்திற்கு வந்ததில், 8.69 லட்சம் கிலோ விற்பனையானது. இதன் மூலம் 14.63 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. கடந்த இரண்டு வாரங்களாக கோவை ஏல மையத்தில் ஏலம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி