நீலகிரி: உறைபனி தாக்கம் - தேயிலை வரத்து அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக விளங்குகிறது. இங்கு 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. 

சிறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பறிக்கும் பசுந்தேயிலையை உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்கின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில் உறைபனியின் தாக்கம் தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நீடிக்கும். உறைபனியால் தேயிலை செடிகள் கருகி பாதிப்படைவதால், விவசாயிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். அறுவடைக்கு தயாரான இலைகளை விரைந்து கொள்முதல் செய்வர். இந்த ஆண்டு உறைபனியுடன் நீர்ப்பனியும் அவ்வப்போது மழையும் பெய்தது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், உறைபனியால் பாதிக்கப்படும் தேயிலை தோட்டங்கள் இம்முறை தப்பின. வழக்கமாக, உறைபனி அதிகமாக இருக்கும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை பசுந்தேயிலை வரத்து குறையும். 

இதனால், கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு குறையும். ஆனால், இந்த ஆண்டு பனி தாக்கம் குறைந்து மழை பெய்ததால் தேயிலை தோட்டங்கள் பாதிப்படையவில்லை. இதனால், இலை வரத்து சீராக உள்ளது. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெண் தொழிலாளர்கள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தியும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி