இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை தவிர ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த மூன்றாம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. இந்நிலையில் கோடை விழாவின் ஒரு நிகழ்ச்சியாக உதகையில், தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில், அரசு கலை கல்லூரி மைதானத்தில், நாய் கண்காட்சி இன்று துவங்கியது. இந்த கண்காட்சியில், 55 இனங்களில், 450க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன.
தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில், 135 மற்றும் 136வது கண்காட்சி உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், இன்று தொடங்கி, 11ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இன்று முதல் நாளில், நாய்களின் கீழ்படிதல் போட்டியுடன் கண்காட்சி துவங்கியது. இந்த போட்டிகளை ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த நடுவர்கள் நாய்களை மதிப்பிடுவார். மேலும், டாஸ்ஹவுண்ட், கோல்டன் ரீட்ரிவர், கிரே டேன் இனங்களின் சிறப்பு கண்காட்சி நடத்தப்படும்.