துடியலூர்; வீடு புகுந்து கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் கேசவன்(19). இவர் கோவை சரவணம்பட்டி ரோடு தென்றல் நகரில் வாடகை வீட்டில் தனது அண்ணன் சரவணன், உறவினர்கள் ரஞ்சித்குமார், விஷ்வன், ஆதீஷ்கண்ணன் மற்றும் சாரதி ஆகியோருடன் தங்கி உள்ளார். அனைவரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி கேசவன் மற்றும் மாணவர் பிரனேஷ் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் மோதி கொண்டனர். இதனால் கல்லூரி நிர்வாகம் கேசவன் மற்றும் பிரனேசை சஸ்பெண்ட் செய்தது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே நேற்று காலையில் பிரனேஷ் தனது நண்பர்கள் 8 பேரை அழைத்து கொண்டு கேசவன் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த பிரனேஷ் கும்பல் தாங்கள் கொண்டு சென்ற இரும்பு ராடினால் மற்றும் உருட்டுக்கட்டையால் சரவணன், ஆதீஷ்கண்ணன், சாரதி ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் பிரனேஷ் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி