இந்த ஆதிவாசி மக்களின் திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் பாரம்பரியமிக்கதாகவும், பழமை வாய்ந்ததாகவும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மந்து என்று அழைக்கப்படுகின்ற 14 இடங்களில் தோடர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த 14 மந்துகளுக்கு தலைமையிடமாக உதகை அருகே உள்ள முத்தநாடு மந்து விளங்கி வருகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே கார்டன் மந்து உள்ளது.
இந்த மந்தில் தோடர் இன மக்களின் தெய்வமான "நார்ஸ் நார்ஸ்" கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு கூரையை மேயும் பணி நடைபெற்றது. இதில், ஏராளமான தோடர் இனமக்கள் தங்களுடைய பாரம்பரிய உடை அணிந்து கூரை வேயும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் தோடர் பழங்குடியின இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி அசத்தினர். இதனை தொடர்ந்து தங்களது பாரம்பரிய உடை அணிந்து, பாரம்பரிய நடனம் ஆடியதை மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணிரூ மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.