நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மேலூர் ஊராட்சிக்குட்பட்ட தூதூர்மட்டம் கிராமத்தில் குறைந்தபட்சம் 1200 ரேஷன் கார்டுகளும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களும், குழந்தைகள், பள்ளி மாணவ மாணவியர்களும் உள்ள நிலையில், ஊராட்சி நிர்வாகம் உறங்கிக்கிடப்பதால் கிராமப்பகுதியில் குப்பைகளை அகற்றாமலும், கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு நடந்து செல்லும் சாலையில் கழிவுநீர் செல்வதாலும் நோய் பரவும் அபாயத்தில் கிராமம் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் இல்லாத நிலையில், ஊராட்சி செயலாளர்களின் கட்டுப்பாட்டில் கிராமம் உள்ளதால், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தண்ணீர் திறக்கும் பணியாளர்களுக்கு மாதச்சம்பளம் முறையாக மாதந்தோறும் வழங்காததாலும், அவர்கள் பணிக்குச் செல்லாததாலும் தூதூர்மட்டம் பகுதி நோய் பரவும் அபாயத்தில் உள்ளது. மேலும், கழிவுநீர் அப்பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் கலந்து வருகிறது. மேலும், குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக்கிடப்பதால், இரவு நேரத்தில் கரடிகள் குப்பைகளை தேடி அதில் கிடக்கும் உணவுக்கழிவுகளைச் சாப்பிட வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.