இதனால் காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தாலும் மீண்டும் வெயில் தலைக்காட்ட தொடங்கியுள்ளது. இதனால் காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம்-மிஷன் காம்பவுண்ட் செல்லும் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமைகள் கூட்டமாக புகுந்து உலா வந்தன. இதனைப் பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து அவைகள் அங்கிருந்து அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தன.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.