நீலகிரி: காட்டுப்பன்றி உடலை மரத்தில் தொங்கவிட்ட சிறுத்தை

நீலகிரி, குன்னூர் கிடங்கு முத்தம்மாச்சேரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்பகுதியில் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை, தற்போது காட்டுப்பன்றியையும் கொன்று மரத்தில் தொங்கவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருவங்காடு பாலாஜி நகர், பாய்ஸ் கம்பெனி, கார்டைட் தொழிற்சாலை கேட்டில் பவுண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நாய்கள் வேட்டையாடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பாலாஜி நகர் - ஆரோக்கியபுரம் இடையே உள்ள முத்தம்மாச்சேரி பகுதியில் மரத்தில் காட்டுப்பன்றி இறந்த நிலையில் தொங்கியதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இது குறித்து பேசிய பொதுமக்கள், இப்பகுதியில் சிறுத்தை அடிக்கடி வந்து நாய்களை வேட்டையாடுகிறது. இம்முறை காட்டுப்பன்றியையும் கொன்று மரத்தில் தொங்கவிட்டுச் சென்றுள்ளது. மீண்டும் வரும் என்பதால் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம் என்றனர். நேற்று காட்டுப்பன்றி குட்டியை காகங்கள் கொத்தி வந்ததையடுத்து, கட்டபெட்டு வனச்சரகர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் பன்றி உடலை மீட்டு அதே இடத்தில் புதைத்தனர். சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி