அவலாஞ்சியில் 14.3 செ.மீ மழை பதிவு

நீலகிரி மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் உதகை, அவலாஞ்சி, கூடலூர், பந்தலூர், அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வந்த நிலையில், மாலை முதல் மழையின் வேகம் சற்று அதிகரித்து காணப்பட்டது. 

நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14.3 செ.மீ மழையும், பந்தலூரில் 8.2 செ.மீ மழையும், சேரங்கோட்டில் 7.9 செ.மீ மழையும், அப்பர் பவானியில் 7.2 செ.மீ மழையும், தேவலாவில் 6.9 செ.மீ மழையும், ஓவேலியில் 4.3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி