ஆயுள் தண்டனை விதித்த உதகை நீதிமன்றம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய்க்கு உதகை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம். கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா. இவர்களுக்கு சுபாஷினி(15), அர்சினி (4) என்ற மகள்கள் இருந்தனர். பிரபாகரன் கடந்த 2018ம் ஆண்டு இறந்து விட்டார். சஜிதா கண்ணேரிமுக்கு என்ற இடத்தில் ஒரு தனியார் விடுதியில் பணியாற்றி வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்பட்டது.

2019ம் ஆண்டு ஜனவரி மாதம் சஜிதா தனது 4 வயது குழந்தை அர்சினி காணவில்லை என்று கோத்தகிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் சஜிதா வேலை செய்யும் விடுதியின் கிணற்றில்  அர்சினி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கோத்தகிரி காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் காவல்துறையினர் அர்சினியின் உடலை கைப்பற்றி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் அர்சினி நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து கோத்தகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சஜிதாவை பிடித்து விசாரித்தனர். அப்போது சஜிதா போதையில் இருந்துள்ளார்.வறுமை காரணமாக குழந்தையை கொன்றதாக சஜிதா தெரிவித்தால், அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இந்த வழக்கின் விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த வந்தது.
வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில் நீதிபதி லிங்கம் சஜிதாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து சஜிதா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி