நீலகிரி: கடைகளை அடைத்து ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மார்க்கெட் இடித்து கட்டக்கூடாது என வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கடைகளை அடைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் 800 கடைகள் உள்ளன. மார்க்கெட் கட்டிடங்கள் பழமை ஆகிவிட்டது என்று கூறி கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.41.50 கோடி மதிப்பீட்டில் கடைகளை இடித்து கட்ட நகராட்சி நிர்வாகம் சார்பாக நேற்றைய தினம் 15 நாட்கள் அவகாசம் வழங்கி கடைகளை காலி செய்ய முதற்கட்டமாக 120 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. 

நோட்டீஸ் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக நகரமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் காவல்துறை உதவியுடன் நோட்டீஸ்களை வழங்கிச் சென்றார். மேலும் மீதமுள்ள 324 கடைகளுக்கு இன்று வழங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று காலை முதலே கடைகளை அடைத்துவிட்டு மார்க்கெட் பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் அனைத்து வியாபாரிகளும் ஒன்றுகூடி போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் நமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது. மேலும் நகராட்சி நிர்வாகம் கடைகளை இடித்து கட்டுவதை கைவிட வேண்டும் என்றும், அதற்காக பல்கட்ட போராட்டங்களை நடத்தப்போவதாகத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி