நீலகிரி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சிறுத்தை தாக்கி பலி

நீலகிரி மாவட்டம் மைனலை அரக்காடு கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அஞ்சலை என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணியை சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நீலகிரி மாவட்டம் தும்மனாட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜே.பாலகொலா பொம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபால், அஞ்சலை தம்பதியினர். அஞ்சலை என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த அஞ்சலை வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இன்று காலை மைனலை அருகே இருக்கக்கூடிய அரக்காடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிப்பதற்காக வந்த வடமாநில தொழிலாளர்கள் வந்துள்ளனர். 

அப்போது அந்தப் பகுதியில் பெண்மணி ஒருவர் வனவிலங்கு தாக்கி உயிரிழந்து கிடந்ததைக் கண்டுள்ளனர். உடனடியாக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி