கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையிலான போலீசார், எஸ்.ஐ.க்கள் யுவராஜ், பாலகுமார், பாலமுருகன் உட்பட போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 101 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த போதைப் பொருட்கள் கோத்தகிரியில் உள்ள கடைகளில் மொத்தமாக விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த யகாயாவுதீன் (70) மற்றும் ஒரசோலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (33) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து போதைப் பொருட்கள் மற்றும் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கோத்தகிரி பகுதியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வருவதால், வெளியிடங்களிலிருந்து பொருட்கள் ஏற்றி வரும் சில வாகனங்களில் மறைத்து கொண்டு வந்து கடைகளுக்கு சப்ளை செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதாகவும், இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.