நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி மற்றும் காட்டு யானைகள், காட்டெருமைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் குன்னூர் அருகே நான்சச் எஸ்டேட் பகுதியில் கரடி ஒன்று மின்கம்பத்தில் தேன்கூடு இருப்பதை அறிந்து மின்கம்பத்தில் ஏறி தேன் எடுக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசியதால் கரடி பரிதாபமாக உயிரிழந்தது.
தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த கரடியின் உடலை கைப்பற்றி முதுமலை வனத்துறை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்பு மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்த பின்பு கரடியின் சடலத்தை தீயிட்டு எரித்தனர்.