திருச்செங்கோடு தேர்த்திருவிழா நிறைவு

திருச்செங்கோடு, பிரசித்தி பெற்ற அர்த்தநாரீசுவரர் கோயில் தேர்த்திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் திருவிழா நடைபெற்று சனிக்கிழமை அர்த்தநாரீசுவரர் மற்றும் உற்சவர்கள் திருமலைக்கு திரும்பி எழுந்தருளினர். கடந்த ஒன்றாம் தேதி அர்த்தநாரீசுவரர் கோயிலில் கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. 

பத்ரகாளியம்மன், விநாயகர், செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீசுவரர், ஆதிகேசவப் பெருமாள் தேர்கள் வடம்பிடித்து பக்தர்கள் இழுத்தனர். தேர்கள் நான்கு ரத வீதிகளில் ரத உலா வந்து உற்சவர்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வியாழக்கிழமை பெரியதேர் நிலை சேர்ந்ததும் கொடி இறக்கம் செய்து வெள்ளிக்கிழமை பல்வேறு மண்டபக்கட்டளைகளில் உற்சவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 

திருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை அதிகாலை கைலாசநாதர் ஆலயத்தில் அர்த்தநாரீசுவரர், ஆதிகேசவப் பெருமாள், செங்கோட்டுவேலவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தென்னிந்திய சிவாச்சார ஜங்கம் மண்டபத்தில் சுவாமிகள் மாலை மாற்றி படிகட்டுகள் வழியாக திருமலைக்கு திரும்பினர். மலையில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து எழுந்தருளி திருவிழா நிறைவு பெற்றது.

தொடர்புடைய செய்தி