நாமக்கல்: வல்வில் ஓரி விழாவையொட்டி தூய்மை பணி

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாள்களில் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதன்படி, இந்த ஆண்டும் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா 02.08.2025 மற்றும் 03.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. வல்வில் ஓரி விழாவையொட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன. இவ்விழாவில், பள்ளிக்கல்வித்துறை, சுற்றுலா துறை, கலைப்பண்பாட்டுத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கிராமிய பாடல்கள், வில்லு பாட்டு, பக்தி பாடல், கிராமிய நடனம், வல்வில் ஓரியின் சிறப்புகள் குறித்த பேச்சு, சிலம்பம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புடைய செய்தி