ஆனால், பெரும்பாலான மண்டலங்களில் ஒருங்கிணைப்புக்குழு நிர்ணய விலையைக் காட்டிலும் 60 காசுகள் வரை குறைவான விலை வைத்து வியாபாரிகள் முட்டைகளை பண்ணையாளர்களிடம் கொள்முதல் செய்கின்றனர். இதனால் பண்ணையாளர்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, ஒரே மாதிரியான முட்டை விலை நிர்ணயத்தை அமல்படுத்துவது தொடர்பாக, நாமக்கல்லில் உள்ள மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஹைதராபாத், ஹோஸ்பெட், விஜயவாடா, கோதாவரி, தனுகு, நாமக்கல் உள்ளிட்ட மண்டலங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. இறுதியாக, ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஒரே மாதிரியான முட்டை விலையை மார்ச் 1 முதல் அமல்படுத்துவது என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. "