ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் புறவழிச்சாலை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் ஏ. எம். விக்கிரமராஜா ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் குழுவினருடன் நேரில் சென்று இடத்தைப் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'தற்போது அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையம் நகரில் இருந்து மிக தொலைவில் உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பேருந்து நிலையம் மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். மக்களுக்கு இப்பகுதி ஏற்புடையதாக இல்லை என்றால் உரிய இடத்தில் அமைக்க வலியுறுத்தி வணிகர்கள் சங்கம் போராட்டம் நடத்தும்' என்றார்.