ராசிபுரம் பஸ் நிலையத்தை மாற்றும் திட்டத்தை கைவிடக்கோரி மனு

ராசிபுரம் பஸ் நிலையம் இடம் மாற்றும் திட்டத்தை கைவிடக்ககோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக திரளானவர்கள் வந்திருந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் பஸ் நிலையம் மாற்றும் திட்டத்தை கைவிட்டு, ரோடு விரிவாக்கம் செய்யும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திரளான பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து, ராசிபுரம் நகர அ. தி. மு. க. , செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்பினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

ராசிபுரம் நகர் மன்ற கூட்டத்தில், நகர பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், நகர பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் சம்பந்தமாக கூறப்பட்டுள்ளதே தவிர, எந்த இடத்திற்கு மாற்றப்படுகிறது, நகராட்சி இடமா, அரசு நிலமா அல்லது இடம் வாங்கப்பட்டுள்ளதா என்ற விபரங்கள் தெரிவிக்கவில்லை.

மேலும், கடந்த ஜூலை 5ம் தேதி, கூட்டணி கட்சிகளுக்கு கூட தகவல் தெரிவிக்காமல், சில பொதுநல அமைப்புகளை வைத்து கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது, ராசிபுரம் நகர பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானாதாக அமைந்துள்ளது என்றனர்.

தொடர்புடைய செய்தி