சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நாத் கான் அருகே உள்ள மன்பூர் பகுதியைச் சேர்ந்த மகருராம் மகன் மகேந்திர குமார் (21). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே பில்லூரில் ரிக் வண்டியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் ரிக்வண்டி லாரிக்கு மகேந்திர குமார் வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மகேந்திர குமார் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கூடச்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மகேந்திரகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பரமத்தி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.