குமாரபாளையம்: மயானம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் தர்ணா

குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துக்காடு பகுதியில் இந்து சமத்துவ மயானம் உள்ளது. இதில், கிறிஸ்தவர்கள் ஒரு பகுதியாகவும், மீதமுள்ள பகுதிகளில் இந்துக்களும், இறந்தவர்களை அடக்கம் செய்து வந்தனர். 

இந்நிலையில் திடீரென கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்கள் இறந்த பிறகு, புதைத்த இடத்தின் மீது சிலுவைகளை பதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மயானம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, மத அடையாளங்களை சவக்குழிகள் மீது அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மதக்கலவரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வருவாய் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், நேற்றுமுன்தினம் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. 

இதிலும் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், நேற்று தாசில்தார் சிவக்குமார் தலைமையில் நில அளவையர்கள் மயானத்தை அளவிடும் பணியினை தொடங்கினர்.

தொடர்புடைய செய்தி