குமாரபாளையம்: மாபெரும் ரத்ததான முகாம்

குமாரபாளையத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் இரத்ததான செய்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை, அரசு பொது மருத்துவமனை இணைந்து உலக இரத்த தான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் குமாரபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை தலைவர் சீனிவாசன், ஈரோடு மாவட்ட இரத்த தான ஒருங்கிணைப்பாளர் கவியரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இரத்த தான முகாமை மருத்துவர் நித்தியானந்தன் தொடங்கி வைத்தார். 

தளிர்விடும் பாரதம் வரதராஜன், தனசேகரன், ஞானசேகர், செந்தில்குமார், பாலாஜி, சின்னையன் மற்றும் செவிலியர்கள் மேனகா, தேன்மொழி ஆகியோர் இரத்த தான முகாமின் சுமூகமான செயல்பாட்டை மேற்பார்வையிட்டனர். குமாரபாளையத்தில் உள்ள பல்வேறு பொது நல அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் இரத்த தான கொடையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இரத்த தானம் செய்தனர். இந்த செயல் அரசு இரத்த வங்கிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. தானம் செய்யப்பட்ட இரத்தத்தை சேகரிக்க திருசெங்கோடு அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் செந்தில்குமார், கண்ணன் மற்றும் குழுவினர் வருகை தந்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி