வேதாரண்யம்: மாமனாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை ஊராட்சியைச் சேர்ந்தவர் முதியவர் 70 வயது சுப்பிரமணியன் விவசாயி. இவரது மனைவியுடன் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் தமிழ்செல்வி அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். 

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுமார் 16 ஆண்டுகள் மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு மருமகன் செந்தில்குமார் வந்துள்ளார். இந்த நிலையில் தமிழ்செல்வி செந்தில்குமார் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். 

தமிழ்செல்விக்கு வீட்டிற்கு தந்தை சுப்பிரமணியன் நேற்று (மார்ச் 26) இரவு சென்றுள்ளார். அப்போது மருமகன் செந்தில்குமார் அங்கு வந்து மனைவி தமிழ்செல்வியிடம் தகராறு செய்துள்ளார். அப்பொழுது மாமனார் சுப்பிரமணியன் சமாதானம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகன் செந்தில்குமார் வீட்டில் இருந்த கயிற்றுக் கட்டிலின் கால்கட்டையை உடைத்து எடுத்து மாமனாரை தலையில் தாக்கியுள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த மாமனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியன் உடலைக் கைப்பற்றி மருமகன் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி