மயிலாடுதுறை: மது, புகையிலை பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மது மற்றும் புகையிலை பொருள்களை பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் நிகழாண்டில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 3,547 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,603 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 74,975 லிட்டர் மதுபான வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இக்குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 12 பேர் மீது தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குட்கா மற்றும் பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 395 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 401 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 949 கிலோ புகையிலை பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்கு தொடர்பாக 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புகையிலை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 302 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் சீல் வைக்கப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு ரூ.45,31,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி