நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கத்தை அடுத்து தண்ணீரைத் தேடி ஊருக்குள் வந்த ஆண் புள்ளிமானை நாய்கள் விரட்டி கடித்ததில் மான் கடலுக்குள் பாய்ந்தது. கோடிக்கரை படகு துறைமுகத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தர் கோயில் ஆறு அருகே ஆண் மான் சடலமாக இன்று ஜூன் 4ம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு கரை ஒதுங்கியது.
அப்பகுதி வழியே மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மனோகரன், மாரியப்பன், செல்வகுமார் ஆகியோர் கடலில் இருந்து மானை மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டு வந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு உடற்கூராய்விற்கு உட்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். நாய்களின் தாக்குதலால் ஆண்டுதோறும் மான்கள் உயிரிழக்க நேரிடுகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மான்களை விரட்டி தாக்கும் நாய்களை கட்டுப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது