தஞ்சாவூரில் இருந்து திங்கள்கிழமை இரவு சென்னை சென்ற உழவன் விரைவு ரயிலில், தஞ்சை மாவட்டம், நாகை ரோடு வேட்டுக்காரத் தெருவைச் சேர்ந்த சுந்தரவேலு (57) என்பவர் பயணித்துள்ளார். சீர்காழி அருகே ஆனைக்காரன்சத்திரம்-வல்லம்படுகை இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது, அதே பெட்டியில் பயணித்த 14 வயது சிறுமிக்கு சுந்தரவேலு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர், சுந்தரவேலுவை பிடித்து ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிதம்பரம் ரயில் நிலையத்தில் சுந்தரவேலுவை இறக்கிய போலீசார், அவரை மயிலாடுதுறை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துக்குமாரசாமியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்திய இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் சிவவடிவேல் தலைமையிலான போலீசார், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து சுந்தரவேலுவை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.