நெற்பயிர்களில் புகையான் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்த, தழைச்சத்து உரங்களை அதிகம் இடுவதை தவிர்க்க வேண்டும். 8 அடிக்கு 1 அடி இடைவெளி விட்டு நெற்பயிரை நடவு செய்ய வேண்டும். நெற்குத்துகளை நெருக்கமாக நடுவதை தவிர்க்க வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைப்படி, தழைச்சத்து இடும்போது 3-4 முறையாகப் பிரித்து இடவேண்டும். களைச் செடிகளை அகற்றிட வேண்டும்.
வயலில் உள்ள நீரை முழுவதுமாக வடித்து, நெற்குத்துகளை நன்கு விலக்கி காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி வெளிச்சம் படும்படி செய்யவும். சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப் பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலி கோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் புகையான் பூச்சிகளை பெருமளவு கட்டுப்படுத்துகின்றன.