மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அகரதிருக்கோலக்கா தெருவைச் சேர்ந்த தொழிலாளி செல்வம் (52). உடல் நலக்குறைவால் இவர் உயிரிழந்தார். இவரது மகன் பிரதீஷ் (16), சீா்காழியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். தற்போது, பிளஸ்1 பொதுத் தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், தந்தை இறந்ததால், சோகத்தில் ஆழ்ந்த பிரதீஷிடம் உறவினர்கள் ஆறுதல் கூறி தேர்வு எழுத செல்லும்படி கூறினர்.
இதைத்தொடர்ந்து, பிரதீஷ் திங்கள்கிழமை நடைபெற்ற கணிதத் தேர்வை எழுதிவிட்டு, தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்தார். அவருடன் தேர்வெழுதிய மாணவர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். இந்தச் சம்பவம் சீர்காழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.