கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயில் வடக்கு வீதி பூக்கடை பகுதியில் சனிக்கிழமை மது போதையில் ஒருவர் ஆபாசமாக பேசி, சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை கீழே தள்ளியும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தும் ரகளையில் ஈடுபட்டார். இந்த நிகழ்வை கைபேசியில் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது பரபரப்பானது. இதுகுறித்து அங்குள்ள பூக்கடை உரிமையாளர் சிவா என்பவர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர் பூக்கடை கோவிந்தன் என்ற கோவிந்தராஜன் (51) என்றும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார் என்பதும் தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.