மயிலாடுதுறை: போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறையில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் குச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசன் (22). இவர், 2021-ஆம் ஆண்டு டிச. 5-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமியிடம் பழகி, பாலியல் தொல்லை கொடுத்து, திருமணம் செய்துள்ளார். 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கவியரசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கவியரசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 1,000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்குரைஞர் ராமசேயோன் ஆஜரானார்.

தொடர்புடைய செய்தி